வீதி உட்கட்டடமைப்பு மற்றும் பராமரிப்பு விடயத்தில் ஒப்பந்தகாரர்களுக்கு திட்டத்தின் முன்னேற்றத்தின் அடிப்படையில் கொடுப்பனவுகளை மேற்கொள்ளும் பாரம்பரிய நடைமுறையில் இருந்து, ஒப்பந்தக்காரர்களின் செயற்திறனுக்கு அமைவாக கொடுப்பனவுகளைச் செலுத்தும் நாடுகளின் வரிசையில் இலங்கை இணைந்துகொண்டுள்ளது.
இந்த அணுகுமுறையானது சிறந்த தரம் மற்றும் சரியான நேரத்தில் தலையீடுகளுக்கான ஊக்கத்தை உருவாக்குவதனால், குறைந்த செலவில் பொதுமக்களுக்கு மேம்பட்ட பராமரிப்புள்ள வீதிகளை வழங்க அரசாங்கத்தினால் இயலும்.
பொதுஜன வேலைத்திட்டத்திற்காக பயன்படுத்தப்படும் புதிய முறைமையானது செலவுகளைக் குறைப்பதற்கும், பொது வளங்களின் பாவனையை மேம்படுத்துவதற்கும், அரச செலவீனத்தை உரிய முறையில் எதிர்வுகூறுவதற்கும் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
புதிய போக்குவரத்து தொடர்புகள் மற்றும் சொத்து முகாமைத்துவ திட்டத்திற்காக உலக வங்கி 125 மில்லியன் அமெரிக்க டொலர்களைக் கடனுதவியாக வழங்கும் உடன்படிக்கையில் உலக வங்கியின் இலங்கைக்கான வதிவிடப் பணிப்பாளர் ஐடா ஸ்வராய் ரிடில்ஹோஃப் மற்றும் நிதி அமைச்சின் திறைசேரியின் செயலாளர் ஆர்.எச்.எஸ்.சமரதுங்க ஆகியோர் இன்று கைச்சாத்திட்டனர்.
“நாடளாவிய வீதிக்கட்டமைப்பின் தரத்தை அதிகபட்சமாக அதிகரித்துக்கொண்டு செலவுகளை இயன்றளவு குறைப்பதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சியானது வீதி அபிவிருத்தி அதிகார சபையின் முன்மாதிரித் திட்டமாக அமையும் என்பதில் ஐயமில்லை. மேம்பட்டதும் பாதுகாப்பானதுமான வீதிகள் அனைத்து இலங்கையர்களுக்கும் நன்மையளிப்பதாக அமைவதுடன் நாட்டின் சுபீட்சத்திற்கும் வறுமை ஒழிப்பிற்கும் பங்களிக்கும்' என ஐடா ஸ்வராய் ரிடில்ஹோஃப் தெரிவித்தார்.
நெருக்கமான வகையிலான வீதிகள் வலையமைப்பை இலங்கை கொண்டுள்ள காரணத்தினால், 95 வீதமான பயணிகள் போக்குவரத்தும் 98 வீதமான சரக்குப் போக்குவரத்தும் வீதிகளுடாகவே மேற்கொள்ளப்படும் நிலையில் போக்குவரத்திற்கான மிகவும் விரும்பத்தக்க முறைமையாக வீதிப்போக்குவரத்தே காணப்படுகின்றது.
உலகவங்கி முன்னதாக Road Sector Assistance Project மூலமாக வழங்கிய உதவியிலிருந்து பெறப்பட்ட படிப்பினைகளின் அடிப்படையில் புதிய நிகழ்ச்சித்திட்டம், வீதி அபிவிருத்தி அதிகார சபை அதன் நிறுவன மற்றும் கட்டமைப்பு ரீதியான மாற்றத்தில் கவனம் செலுத்தி உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித்தருகின்ற நிறுவனம் என்ற நிலையில் இருந்து சேவை வழங்குநர் என்ற நிலையை நோக்கி மாற்றம் பெறுவதற்கு வலுச்சேர்ப்பதாக அமையும்.
இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் மூலமாக அறிமுகப்படுத்தப்படும் புதிய ஒப்பந்த முறைமையானது, தரங்குறைந்த வேலை பெரும் செலவீனம் குறித்த ஒப்பந்தகாலத்திற்கு அதிகமாக நாட்களை எடுத்துக்கொள்ளல் மற்றும் தரங்குறைவாக செயற்படும் ஒப்பந்தகாரர்கள் என பல்வேறு பிரச்சனைகளை எதிர்நோக்கியிருக்கும் இந்த தொழிற்துறையை முன்னேற்றகரமாக மாற்றியமைக்கும். A3 தேசிய நெடுஞ்சாலையில் ஜா-எல தொடக்கம் சிலாபம் வரையிலான பகுதியில் மேற்கொள்ளப்படவுள்ள முன்னோடி நடவடிக்கையாக இடம்பெறவுள்ள இந்த முறைமையின் கீழ் ஒப்பந்தக்காரர் நீண்டகால ஒப்பந்தத்தின் அடிப்படையில் வடிவமைப்பு மேம்படுத்தல், புனரமைப்பு மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வர்.
“வீதி அபிவிருத்தி அதிகார சபையானது ஒப்பந்தகாரரைக் கண்காணிக்கும். குன்றுகுழிகள் அற்றும் நீர் தேங்கி நிற்காதும் வீதிகள் இருப்பதை உறுதிசெய்தல். அத்தோடு வீதியின் இருபுறமும் உள்ள கற்கள் சீராகப் பதிக்கப்பட்ட பகுதிகள், நீர் வழிந்தோடும் வடிகான் கட்டமைப்பு, ஒளியூட்டல் என்பவை உரியவகையில் பராமரிக்கப்படுவதை உறுதிப்படுத்துவதுடன் வீதிப்பாவனையாளர்களுக்கு சௌகரியமானதாக காணப்படவேண்டும்' என உலக வங்கியின் உட்கட்டமைப்பு தொடர்பான சிறப்பியலாளரும் பணித்திட்டக் குழுவின் தலைவருமான அமாலி ராஜபக்ஸ தெரிவித்தார். “செலவுகளைக் குறைக்கவும் எதிர்காலத்தில் ஏனைய பல துறைகளுக்கான முன்மாதிரியாக விளங்குவதால் இவ்வாறான ஒப்பந்தங்கள் அரசாங்கம், ஒப்பந்தக்காரர்கள் மற்றும் பொதுமக்களுக்கும் நன்மைபயப்பதாக அமையும்.
உலக வங்கியின் மானிய மற்றும் குறைந்தளவிலான வட்டியுடனான கடன்களை வழங்கும் உப நிறுவனமான சர்வதேச அபிவிருத்தி நிறுவகம் (IDA) இந்த நிகழ்ச்சித் திட்டத்திற்கான கடனுதவியை ஐந்தாண்டு கருணைக்காலம் அடங்கலாக 25 வருடகால முதிர்ச்சியடையும் வகையில் வழங்குகின்றது. இந்த நிகழ்ச்சித்திட்டமானது, ஆசிய அபிவிருத்தி வங்கியினால் கடனுதவி வழங்கப்படும் நிகழ்ச்சித் திட்டமொன்றிற்கும் ஆதரவு வழங்குகின்றது. இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பிரதான நிறுவனமாக வீதி அபிவிருத்தி அதிகார சபை திகழ்கின்றது.
தொடர்புகளுக்கு:
வொஷிங்டன்: ஜோ க்வின் +1 (202) 473-56331; jqian@worldbank.org
கொழும்பு:திலினிகா பீரிஸ் +94 (011) 556 1347; dpeiris@worldbank.org
பேஸ்புக் ஊடாக நாட: http://www.facebook.com/worldbank
டுவிட்டர் ஊடாக அறிய: http://www.twitter.com/worldbank
எமது யூ ட்யூப் அலைவரிசையைப் பார்க்க: http://www.youtube.com/worldbank