வருமான சேகரிப்பை அதிகரிக்க நவீனமயமாக்கப்பட்ட வரி நிர்வாக மூலோபாயம் அத்தியாவசியமானதாகும்.
கொழும்பு, 2023 ஒக்டோபர் 3 - 2023 ஆம் ஆண்டு 3.8% வீத ஒடுக்கத்தை வெளிப்படுத்திய இலங்கையின் பொருளாதாரம் 2024 ஆம் ஆண்டு 1.7% வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுவதாக உலக வங்கி தனது வருடத்திற்கு இரண்டு முறை மேற்கொள்ளப்படும் நிலவர ஆய்வின் ஊடாக தெரிவித்துள்ளது. பொருளாதாரத்தின் எதிர்கால வாய்ப்புநிலை குறித்த நிச்சயமற்ற தன்மை காரணமாக ஒரு தெளிவற்ற நிலை காணப்படுவதாகவும் இதன் மூலம் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் கடன் மறுசீரமைப்பு மற்றும் முக்கியமான கட்டமைப்பு சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதிலேயே எதிர்கால பொருளாதார வளர்ச்சி வாய்ப்புகளின் முன்னேற்றம் தங்கியிருப்பதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.
இன்று வெளியிடப்பட்ட, “சிறந்த எதிர்காலத்திற்கான வரி வருமானத் திரட்டல்” என்ற இலங்கை அபிவிருத்தி குறித்த நிலவர ஆய்வில், பெரும் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு இலங்கை திரும்புவதற்கு மேம்படுத்தப்பட்ட வருமானத் திரட்டல் முக்கியமானது என்று தெரிவிக்கிறது. உள்நாட்டு மொத்த உற்பத்திக்கான உலகிலேயே மிகக் குறைந்த வரி விகிதங்களைக் கொண்ட நாடாக இலங்கை விளங்குகிறது. 2022 ஆம் ஆண்டளவில், இலங்கையின் வரி முறையின் முக்கிய பண்புகளாக, குறைந்த, பல்வகைப்பட்ட மற்றும் அடிக்கடி மாறிவரும் விகிதங்கள், ஒரு குறுகிய மற்றும் சுருங்கி வரும் அடிப்படையைக் கொண்ட, மூலதன வருமானத்தைப் பார்க்கிலும் உழைப்பின் மீதான அதிக வரிச் சுமை, மறைமுக வரிகளை அதிகமாகச் சார்ந்திருத்தல் மற்றும் இணக்கத்தன்மை தொடர்பான மோசமான பெறுபேறுகளுடன் கூடிய பலவீனமான நிர்வாகம் ஆகியவற்றை வெளிப்படுத்துவதாக இருந்தது. இந்த அம்சங்கள் வரி முறைமையை சிக்கலானதாகவும், வினைத்திறனற்றதாகவும், நியாயமற்றதாகவும் ஆக்கியுள்ளது.
அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட வரிச் சீர்திருத்த பொதியானது 2022 ஆம் ஆண்டு மே மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இப்பொதியானது புதிய வரிகளின் அறிமுகம், வரி விகிதங்கள் மற்றும் அடிப்படைகளுக்கான விரிவான சரிசெய்தல்கள் மற்றும் வரி சேகரிப்புத் திறனை மேம்படுத்துதல் மற்றும் இணக்கப்பாட்டினை அதிகரிக்கும் நோக்கம் ஆகியவற்றை உள்ளடக்குகிறது. இலங்கையின் அபிவிருத்தி பற்றிய மிக அண்மைய நிலவர ஆய்வானது, முன்னெடுக்கப்பட்டு வரும் சீர்திருத்தங்கள், இடைவெளிகள், பரிந்துரைகள் மற்றும் எதிர்கால வாய்ப்புகள் ஆகியவற்றின் முன்னேற்றம் குறித்து கவனம் செலுத்துகிறது.
பொருளாதார நெருக்கடி நிலையின் ஆரம்ப கட்டத்திலிருந்தே முக்கியமான சீர்திருத்தங்களை மேற்கொள்ள இலங்கை நடவடிக்கை எடுத்துள்ளது. ஒரு பேண்தகு வளர்ச்சிப் பாதையை மீட்டமைக்கும் போது அரச நிதி அபாயங்களை நிர்வகிக்கின்ற அதேநேரம், சீர்திருத்த நடவடிக்கைகளையும் உரிய முறையில் பேணுவது மிகவும் முக்கியமானதாகும்,” என்று உலக வங்கியின் மாலைத்தீவுகள், நேபாளம் மற்றும் இலங்கைக்கான பணிப்பாளர் பாரிஸ் எச். ஹடாட்-செர்வோஸ் தெரிவித்தார். "வரி வருமானத்தைத் திரட்டுவதற்கான தற்போதைய முயற்சிகள் பொதுமக்களின் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கும் சிறந்த பொதுச் சேவைகளை வழங்குவதற்கும் செலவினங்களின் வெளிப்படைத்தன்மையை நோக்கிய தொடர்ச்சியான சீர்திருத்தங்களுடன் இணைத்து நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்."
வரிக் கொள்கைச் சீர்திருத்தங்கள் வருமான சேகரிப்பில் நிலையான அதிகரிப்புக்கு மாற்றப்படுவதை உறுதிசெய்ய வரி நிர்வாக நவீனமயமாக்கல் மூலோபாயத்தை திறம்பட நடைமுறைப்படுத்துவது இன்றியமையாததாகும். இதன்போது இலத்திரனியல் ஊடாக கோப்புகளை சமர்ப்பிப்பதை மேம்படுத்துதல், இணக்க இடர் முகாமைத்துவத்தை வலுப்படுத்த மூன்றாம் தரப்பு தகவலைப் பயன்படுத்துதல், பிணக்குகள் தீர்வை ஒழுங்குபடுத்துதல் மற்றும் தவணை தவறிய வரிகளை சேகரித்தல் ஆகியவற்றை முன்னேற்றுதல் முக்கிய முன்னுரிமைகளில் அடங்கும். மேலும், பெரிய மற்றும் அதிக நிகர மதிப்புள்ள நபர்களை இலக்கு வைப்பதற்கும், இந்த நிகழ்வுகளின் சிக்கல்தன்மையை கையாளுவதற்கு நிர்வாகத்தின் திறனை மேம்படுத்துவதற்கும் சிறந்த வரி செலுத்துவோர் பிரிவு முக்கியமானதாகும். இந்த ஒவ்வொரு தலையீட்டுக்கும் அடித்தளமாக செயற்படும் தகவல் தொழில்நுட்ப உட்கட்டமைப்பை வலுப்படுத்த முதலீடுகள் தேவையாகும்.
இலங்கை அபிவிருத்தி நிலவர ஆய்வு என்பது தெற்காசிய அபிவிருத்தி நிலவர ஆய்விற்கான ஒரு துணைப் பகுதியாகும், இது தெற்காசிய பிராந்தியத்தில் பொருளாதார அபிவிருத்திகள் மற்றும் வாய்ப்புகளை ஆராய்ந்து நாடுகள் முகம்கொடுக்கும் கொள்கை சவால்களை பகுப்பாய்வு செய்யும் வருடத்திற்கு இரண்டு முறை மேற்கொள்ளப்படும் உலக வங்கியின் அறிக்கையாகும். வேகமான, தெளிவான வளர்ச்சியை நோக்கி என்ற தலைப்பிலான 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாத பதிப்பானது தெற்காசியாவின் வளர்ச்சி, உலகின் ஏனைய பகுதிகளில் உள்ள அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளை விட அதிகமாக இருப்பதை காட்டுகின்ற போதிலும், தொற்று நோய் நிலைமைக்கு முன்னரான வேகத்தை விட குறைந்த வேகத்தில் இருப்பதையும் அதன் வளர்ச்சி இலக்குகளை அடைய போதுமான வேகம் இல்லை என்பதையும் காட்டுகிறது. இந்த அறிக்கையானது தனியார் துறை முதலீட்டை ஊக்குவித்தல் மற்றும் உலகளாவிய சக்திவள மாற்றத்தால் உருவாக்கப்பட்ட வாய்ப்புகளில் இருந்து பயனடைதல் உட்பட, அரச நிதி அபாயங்களை நிர்வகிக்கவும் மற்றும் வளர்ச்சியை விரைவுபடுத்தவும் பிராந்தியத்தில் உள்ள நாடுகளுக்கான குறுகிய மற்றும் நீண்ட கால கொள்கை பரிந்துரைகளையும் உள்ளடக்கியுள்ளது.
Source: World Bank, Poverty & Equity and Macroeconomics, Trade & Investment Global Practices. Emissions data sourced from CAIT and OECD.
Notes: e=estimate, f=forecast. Poverty data are expressed in 2017 PPP, versus 2011 PPP in previous editions - resulting in major changes. See pip.worldbank.org
(a) GDP by expenditure for 2020 and 2021 are estimates, as the data published on March 15, 2023 by authorities only included GDP by production.
(b) Calculations based on SAR-POV harmonization, using 2019-HIES. Actual data: 2019. Nowcast: 2020-2022. Forecasts are from 2023 to 2025.
(c) Projection using neutral distribution (2019) with pass-through = 0.87 (Med(0.87)) based on GDP per capita in constant LCU.