Skip to Main Navigation
செய்தி வெளியீடு நவம்பர் 3, 2021

உள்ளடக்கமான வளர்ச்சியை நோக்கிய மனித மூலதனத்தை விரைவுபடுத்துவதற்கு இலங்கை உறுதிபூண்டுள்ளது

கொழும்பு, நவம்பர் 3, 2021 – சுகாதாரம், கல்வி மற்றும் சமூகப் பாதுகாப்பில் மனித மூலதனத்தில் அதிக மற்றும் சிறந்த முதலீடுகளை விரைவுபடுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் உறுதி பூண்டுள்ளது. இதன் மூலம் உலக வங்கியின் மனித மூலதன செயல்திட்டத்தில் இணையும் 82வது நாடாக இருக்கின்றது.

இன்று நடைபெற்ற உயர்மட்ட மனித மூலதன மாநாட்டில், ஆகக் குறைந்தது 12 அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், அமைச்சின் செயலாளர்கள், இராஜாங்க அமைச்சின் செயலாளர்கள், மற்றும் நிதியமைச்சின் பணிப்பாளர் உட்பட பல்வேறு உயர்மட்ட அதிகாரிகள் ஒன்றிணைந்து  அதிகரித்த எதிர்கால உற்பத்தித்திறன் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கும், பசுமையான, நெகிழ்வான மற்றும் உள்ளடக்கமான அபிவிருத்தியை ஏதுவாக்குவதற்கும் விரைவுபடுத்தப்பட்ட மனித மூலதனத்திற்கான குறுகிய கால மற்றும் இடைக்கால முன்னுரிமைகள் குறித்து கலந்துரையாடினர். உலகெங்கிலும் இருந்தும், இலங்கையிலிருந்தும் இணையவழியாக சுமார் 200 பேர் கலந்துகொண்டனர்.

“மக்களில் முதலீடு செய்வது என்பது எமது அரசாங்கத்தின் மூலோபாயத்தில் பிரதானமானதாக இருக்கின்றது. கொவிட்-19இற்குப் பின்னரான மீட்சியின் வெற்றியை உறுதி செய்வதற்கு முக்கியமானதாகும். ஆரம்ப சிறுபராய கல்வியை மேம்படுத்துவதற்கு, உலகளாவிய முதன்மை மற்றும் இரண்டாம் நிலை கல்வியை எட்டுவதற்கு, உயர்கல்வி மற்றும் தொழிநுட்ப, தொழிற்கல்விக்கான அணுகும் வசதியையும், தரத்தையும் அதிகரிப்பதற்கும், எதிர்கால சுகாதார பராமரிப்பு சவால்களை எதிர்கொள்வதற்கு சுகாதார பராமரிப்பு முறைமையின் தரத்தை பரவலாக்குவதற்கும், மற்றும் சமுர்த்தி மற்றும் ஏனைய பாதுகாப்பு வலைகளின், மற்றும் வேலைவாய்ப்பு நிகழ்ச்சிகள் ஊடாக இலகுவில் பாதிப்புக்கு உள்ளாகக் கூடிய தனிநபர்கள் மற்றும் குடும்பங்களிற்கு ஆதரவளிப்பதற்கும் மனித மூலதனத்தில் முதலீடு செய்வதற்கு நாம் தொடர்ந்தும் முன்னுரிமையளிப்போம்” என கௌரவ நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸ அவர்கள் தெரிவித்தார்.

இலங்கையின் உறுதியான மனித அபிவிருத்தி வௌியீடுகளை நாட்டின் உயர் அளவிலான கொவிட்-19இற்குமுன்னரான மனித மூலதன சுட்டெண் புள்ளிகள் வௌியிடுகின்றன. தெற்காசியாவிலும், உலகளவிலும் அதிகமானதாக இது இருக்கின்றது. எவ்வாறாயினும், இலங்கையில் வேலை இழப்புகள், கடுமையான கற்றல் நெருக்கடி, மற்றும் மோசமாகும் ஊட்டச்சத்தின்மை உள்ளடங்கலாக மனித மூலதன பயன்பாட்டில் குறிப்பிடத்தக்களவு பாதிப்பினை கொவிட்-19 பெருந்தொற்று ஏற்படுத்தியுள்ளது. வறுமை, மற்றும் விசேடமாக எதிர்கொள்ளும் பொறியமைப்புகளில் பற்றாக்குறை உள்ளவர்கள் மற்றும் ஏற்கனவே பிரதிகூலமான நிலையில் உள்ளவர்களின் பாதிக்கப்படக் கூடிய தன்மை என்பன அதிகரிப்பதற்கு இவை அனைத்தும் காரணமாக அமைந்தன.

“சுபீட்சத்தின் நோக்கு” அரசாங்கத்தின் தேசிய கொள்கைப் பிரகடனத்திற்கு அமைய சுகாதாரம், கல்வி மற்றும் சமூகப் பாதுகாப்புச் சார்ந்த இலக்குவைக்கப்பட்ட செயற்பாடுகளின் ஊடாக மனித மூலதான சவால்களினை அடையாளங் காண்பதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு உலக வங்கி உதவுகின்றது.

“பெருந்தொற்றில் இருந்து இலங்கையின் மீட்சிக்கும், எதிர்கால உற்பத்தித் திறனை தூண்டுவதற்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் மக்களைப் பாதுகாப்பதும், அவர்களில் முதலீடு செய்வதும் பிரதானமானதாகும்” என உலக வங்கியின் தெற்காசியாவுக்கான துணைத் தலைவர் ஹார்ட்விக் ஸ்காஃபர் தெரிவித்தார். “கடினமாக வென்றெடுத்த முன்னேற்றங்களை பாதுகாப்பதற்கு நாட்டிற்கு உரிய தருணத்திலானதாக மனித மூலதன செயல்திட்டத்தில் இலங்கையின் உறுப்புரிமை உள்ளது. மனித மூலதன அபிவிருத்தியைத் தூண்டுவதற்கும், மேலும் உள்ளடக்கமான, நெகிழ்வான வளர்ச்சிக்கு வழியமைப்பதற்கும் இலங்கைக்கு உதவுவதற்கு உலக வங்கி தயாராக இருக்கின்றது” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

உள்ளடக்கமான பொருளாதார வளர்ச்சிக்காக மக்களில் முதலீடுகளை தூண்டுவதற்கான உலகளாவிய ஒரு முயற்சியாக மனித மூலதன செயல்திட்டம் அமைந்துள்ளது. இது அடுத்த தலைமுறையின் மனித மூலதனத்தில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பை உருவாக்குகிறது; மனித மூலதனத்தில் முதலீடு செய்யவும் பாதுகாக்கவும் உதவும் அளவீடு, ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு திட்டத்திற்கான அணுகலை வழங்குகிறது; மற்றும் மனித மூலதன மேம்பாட்டிற்கான விரைவுபடுத்தப்பட்ட முன்னுரிமைகளை உருவாக்கி செயல்படுத்தும் நாடுகளுக்கு சக-கற்றலை ஆதரிக்கிறது.

மக்கள் முதலீடுகளை விரைவுபடுத்தும் நோக்கத்தில் உறுதிமொழி ஏற்று, இந்நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர்கள் பின்வருமாறு அறிக்கை வெளியிட்டனர்.

இலங்கைக்கான மனித மூலதனப் பெறுபேறுகளின் உயர் மட்டங்களை எட்டுவதற்கு கல்வியில் முதலீடுகள் மையமாக உள்ளன. அனைத்து குழந்தைகளுக்கும் குழந்தை பருவக் கல்வி மற்றும் பாடசாலைக் கல்வி ஆகியவற்றை உள்ளடக்கிய வகையில் எங்கள் அமைச்சு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது. தரமான உயர்கல்வி மற்றும் தொழில் பயிற்சி பெறுவதற்கான வாய்ப்புகள் உற்பத்தித்திறன், பின்னடைவு மற்றும் தொழிலாளர் சந்தை விளைவுகளை அதிகரிக்க உதவுகிறது. குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் பொருளாதாரத்திற்கு பங்களிக்கும் திறனைக் கூர்மைப்படுத்த உலக வங்கியுடன் இணைந்து முதலீடு செய்ய நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

“ஆரோக்கியமான மக்கள்தொகை ஒரு நாட்டின் மனித மூலதனத்தை மேம்படுத்துவதற்கான அடித்தளமாகும். ஒரு மனிதனின் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் ஊட்டச்சத்தில் முதலீடுகளுக்கு முன்னுரிமை அளிப்பது மற்றும் பதிலளிக்கக்கூடிய, வலுவான சுகாதார அமைப்பை உறுதி செய்வது மிக முக்கியமானது. அதே நேரத்தில், தொழிநுட்பத்தை மேம்படுத்துவதானது சுகாதார சேவை வழங்கலின் செயல்திறன், தரம் மற்றும் நிர்வாகத்தை மேலும் மேம்படுத்தும்” என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டார்.

“தொழில்கள் மற்றும் வருமானங்களைப் பாதுகாப்பது மற்றும் மீட்டெடுப்பது, தொற்றுநோயிலிருந்து இலங்கையை மீட்பதில் பிரதானமானதாக இருக்கும். பயனுள்ள சமூகப் பாதுகாப்பு உத்திகள் மற்றும் சமூகக் காப்பீட்டுத் திட்டங்களுடன் இந்தச் சவால்களைச் சமாளிப்பதற்கு இலட்சியம் மிக்க கொள்கைகள் மற்றும் திட்டங்கள் தேவை. குறிப்பாக புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான தொழிலாளர் சந்தை திட்டங்களை மேம்படுத்துவதன் மூலம் மனித மூலதனத்தில் முதலீடு செய்வதன் மூலம் இலங்கை முழுமையாக பயனடைய முடியும். இலங்கையின் தொழிலாளர் சந்தை திட்டங்கள், சமூகப் பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் கொள்கைகளை மேம்படுத்துவதற்கு உலக வங்கியுடன் இணைந்து அனைத்து இலங்கையர்களின் முழுத் திறனையும் உணர்ந்துகொள்ள நாங்கள் எதிர்பார்க்கிறோம். என தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.


தொடர்பு

கொழும்பில்
டிலினிகா பீரிஸ்
+94 (011) 5561347
dpeiris@worldbank.org
வொஷிங்டனில்
டயானா சங்
+1 (202) 473-8357
dchung1@@worldbank.org
Api
Api