இந்த திட்டம் களனி ஆற்றுப் படுகையில் வானிலை முன்னறிவிப்பு, எச்சரிக்கை மற்றும் வெள்ள மீட்பு ஆகியவற்றை ஆதரிக்கும்
கொழும்பு, செப்டம்பர் 20, 2021- காலநிலை நெகிழ்வுதிறன் பல கட்ட செயல்திட்டத்தின் முதலாம் கட்ட திட்டத்திற்கான 92 மில்லியன் டொலர் நிதி ஒப்பந்தத்தில் இலங்கை அரசாங்கமும் உலக வங்கியும் கையெழுத்திட்டன. இந்த திட்டம் வானிலை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு முன்னறிவிப்பு மற்றும் முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்புகளை நவீனப்படுத்துவதன் மூலம் நாடு முழுவதும் சுமார் 11.2 மில்லியன் மக்களுக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அரசாங்கத்தின் சார்பில் நிதியமைச்சின் செயலாளர் சஜித் அட்டிகல அவர்களும், உலக வங்கியின் சார்பில் இலங்கைக்கான உலக வங்கியின் வதிவிடப் பணிப்பாளர் பாரிஸ் ஹடாட் ஷெர்வோஸ் அவர்களும் கைச்சாத்திட்டனர்.
தீவிர வானிலை நிகழ்வுகளால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும். மேலும் காலநிலை மாற்றம் காரணமாக 2050ஆம் ஆண்டுக்குள் 1.2 சதவிகித GDP இழப்பு ஏற்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 2050இற்குள் வெள்ளம் அல்லது வறட்சியின் அடிப்படையில் மிதமான அல்லது கடுமையான பாதிப்புக்குள்ளாகக்கூடிய பகுதிகளில் சுமார் 19 மில்லியன் இலங்கையர்கள் வசிக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
"இந்த திட்டம் மக்களின் உயிர்கள், சொத்துக்கள் மற்றும் பொது சொத்துக்களைப் பாதுகாப்பதாகும்" என்று மாலைதீவுகள், நேபாளம் மற்றும் இலங்கைக்கான உலக வங்கியின் வதிவிடப் பணிப்பாளர் பாரிஸ் ஹடாட் ஷெர்வோஸ் கூறினார். இந்த திட்டம் முக்கிய பங்குதாரர்களிடையே பொது ஆதரவும் ஒருங்கிணைப்பும் வெற்றிக்கு வழிவகுக்கும் என்று குறிப்பிட்ட அவர “அதிநவீன தொழிநுட்பம் மற்றும் சர்வதேச தரத்துடன் இருக்கும் அமைப்புகளை நவீனமயமாக்குவதற்கான முதலீடுகள், பேரழிவை எதிர்கொள்ளும் இலங்கை பற்றிய அரசாங்கத்தின் பார்வையை உணர உதவும்"; எனத் தெரிவித்தார்.
வெள்ள அபாயத் தணிப்பு மற்றும் காலநிலை அபாயங்களுக்கு நீண்டகால நெகிழ்ச்சி ஆகியவற்றில் அரசாங்கத்திற்கும் உலக வங்கிக்கும் இடையிலான வெற்றிகரமான ஒத்துழைப்பை இந்த திட்டம் உருவாக்குகிறது. இது 2010இல் அணை பாதுகாப்பு மற்றும் நீர் வள திட்டமிடல் திட்டத்துடன் தொடங்கியது. அதையடுத்து 2012இல் மாநகர கொழும்பு நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் மற்றும் 2014இல் காலநிலை நிலைத்தன்மையை மேம்படுத்தும் திட்டத்தின் மூலம் தொடர்ந்தது.
களனி ஆறு கொழும்பின் குடியிருப்பு மற்றும் தொழில்துறை மக்களுக்கு ஒரு முக்கிய நீர் ஆதாரமாகும். வெள்ளப்பெருக்கினால் இலகுவில் பாதிப்புக்கு உள்ளாகக் கூடிய, ஆற்றுப்படுக்கைக்கு அருகில் வசிக்கக் கூடிய மக்களுக்கு இது விவசாயம் மற்றும் போக்குவரத்து சேவைகள் போன்ற வாழ்வாதார வாய்ப்புகளை வழங்குகிறது.
வானிலை தொடர்பான அபாயங்களை முன்னறிவிப்பதற்கும், முன்கூட்டியே எச்சரிக்கை அமைப்புகளை மேம்படுத்துவதற்கும், வெள்ளம் மீளக்கூடிய உள்கட்டமைப்பில் முதலீடு செய்வதற்கும் இந்தத் திட்டம் அரசாங்கத் துறைகளுக்கு உதவும். இது நீண்ட காலத்திற்கு களனி ஆற்றுப் படுகையில் வெள்ள அபாயங்களைக் குறைப்பதற்கான அடித்தளத்தை அமைக்கும்.
அம்பத்தலையில் உப்புத் தடையை மேம்படுத்துவதன் மூலம் கொழும்பிற்கான பாதுகாப்பான மற்றும் நம்பகமான குடிநீர் விநியோகத்தையும், அடுத்த திட்டக் கட்டங்களில் பலநோக்கு வெள்ள மீட்பு உள்கட்டமைப்பிற்கான விரிவான முதலீட்டு முன்மொழிவுகளின் மூலம் களனி ஆற்றுப் படுகையில் நீண்டகால காலநிலை நிலைத்தன்மையையும் இந்த திட்டம் ஆதரிக்கும்.
இந்த திட்டம் பல வருட அனுபவம், தொழிநுட்ப ஆய்வுகள் மற்றும் பங்குதாரர்களுடன் நெருக்கமான ஆலோசனை - தொடர்புடைய அரசு துறைகள் திட்டம் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் சிவில் சமூக குழுக்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. வானிலைத் திணைக்களம், நீர்ப்பாசனத் திணைக்களம், தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் ஆகியவை நெருக்கமான வானிலை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளுக்கு மக்களையும் சொத்துக்களையும் பாதுகாக்க சிறந்த தயார்நிலைக்கு நம்பகமான எச்சரிக்கையுடன் மக்களை அணுகுவதற்கு நெருக்கமாக ஒத்துழைக்கும். நீர்ப்பாசன அமைச்சு மற்றும் தேசிய பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு என்பன இந்த திட்டத்தை செயல்படுத்தும்.