356000 கிராமியக் குடும்பங்களுக்கு நன்மையளிக்கும் திட்டம்
கொழும்பு, 2021 ஏப்ரல் 22 - 165,000 ஹெக்டெயர் விவசாய நிலங்களை உள்ளடக்கிய அணைகள் மற்றும் நீர்ப்பாசனத் திட்டங்களை மேம்படுத்துவதற்கும், நீர்நிலைகள் மற்றும் நீர்வளங்களின் முகாமைத்துவத்தை மேம்படுத்துவதற்கும் இலங்கை அரசாங்கமும் உலக வங்கியும் இன்று 69.53 மில்லியன் டொலர் கடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன, இதனால் சுமார் 356,000 விவசாயக் குடும்பங்கள் பயனடைகின்றன.
அரசாங்கத்தின் சார்பாக நிதி அமைச்சின் செயலாளர் சஜித் ஆர்டிகல மற்றும் உலக வங்கி சார்பாக இலங்கைக்கான உலக வங்கியின் வதிவிடப் பணிப்பாளர் பாரிஸ் ஹத்தாத்-ஸெர்வோஸ் ஆகியோர் கைச்சாத்திட்டனர்.
"இலங்கையின் நீண்டகாலப் பொருளாதாரச் செழிப்புக்கு நீர் வளங்களைத் திறம்பட நிர்வகிப்பது மிக முக்கியமானது" என்று இலங்கைக்கான உலக வங்கியின் வதிவிடப் பணிப்பாளர் பாரிஸ் ஹத்தாத்-ஸெர்வோஸ் கூறினார். "இலங்கையில் இயற்கை மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட நீர்வளங்கள்
நிறைந்துள்ளதால் நீர்நிலைகளைப் பாதுகாப்பதானது, நாடு காலநிலை மாற்றத்திற்கு முகங்கொடுப்பதற்கும் மக்கள் மற்றும் அவர்களின் வாழ்வாதாரங்களில் காலநிலையினால் தூண்டப்படக்கூடிய அபாயங்களைக் குறைப்பதற்கும் உதவும்."
தீவிர வெள்ளம், வறட்சி மற்றும் நிலச்சரிவு நிகழ்வுகளின் தாக்கங்களைத் தடுக்க உதவும் அதேவேளை, மேம்பட்ட நீர் தரத்தில் பங்களிப்புச் செய்வதற்கும், மத்திய மலைநாட்டிலுள்ள உள்ள மேல் மகாவலி நீர்நிலைகளை மையமாகக் கொண்டு, நீர்நிலைகளைப் பாதுகாத்தல், மீட்டமைத்தல் மற்றும் சிறப்பாக முகாமைசெய்தல் இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.
இந்தச் செயற்றிட்டமானது திட்டமிடல் ஆதரவை, நீர்நிலை முகாமைத்துவம், அணைப் பாதுகாப்பு ஆய்வு நடைமுறைகள் மற்றும் அணைப் பரப்பெல்லை இடர் மதிப்பீடுகள் மற்றும் விரிவான அக்கறையுள்ளோர் ஆலோசனையுடன் வடிவமைக்கப்பட்ட அணுகுமுறைகள் மூலம் நீர்ப்பாசன முறைகளைப் புனரமைப்புச் செய்தல் ஆகியவற்றுடன் இணைக்கும். செயற்றிட்டப் பெறுபேறுகளிலிருந்து பயனடைவதை உறுதிப்படுத்துவதற்காக, முக்கிய செயற்றிட்டத் தலையீடுகளில் இளைஞர்கள் மற்றும் பெண்கள் பங்கேற்பதை இது ஊக்குவிக்கும்.
"இலங்கை அரசாங்கம் எங்கள் நீர்நிலைகளை பாதுகாப்பதில் உறுதியாக உள்ளதுடன் “இலங்கையில் ஒரு பொதுவான நீர்நிலை முகாமைத்துவ அணுகுமுறையை வளர்ப்பதற்கான மூலோபாயப் பொறிமுறை" என்ற கருப்பொருளின் கீழ் ஒரு பரந்த கொள்கைக் கட்டமைப்பை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது என நீர்ப்பாசன அமைச்சர் கௌரவ சமல் ராஜபக்ஷ குறிப்பிட்டார். "இந்த ஐந்தாண்டுத் திட்டத்தின் மூலம் எங்கள் பெறுமதிமிக்க நீர்வளங்கள் மற்றும் நீர்நிலைகளை அபிவிருத்தி செய்வதில் உலக வங்கியுடன் இணைவதில் நீர்ப்பாசன அமைச்சு மகிழ்ச்சியடைகிறது" என அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்தத் திட்டத்தை நீர்ப்பாசன அமைச்சு நடைமுறைப்படுத்தும். 69.53 மில்லியன் டொலர் கடனுக்கான உலக வங்கி உதவியானது சர்வதேச அபிவிருத்தி சங்கத்திடமிருந்தும் திட்டத் தயார்படுத்தல் நடவடிக்கைகளாவன கொரிய-உலக வங்கி குழுமக் கூட்டாண்மை வசதியின் மானியத்தின் மூலமும் ஆதரிக்கப்படுகின்றன.
இலங்கையில் உலக வங்கி முதலீட்டுப் பரப்பெல்லையில் போக்குவரத்து, நகர்ப்புற, நீர், கல்வி மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 2.3 பில்லியன் டொலர் பெறுமதியான 19 செயற்றிட்டங்கள் உள்ளன.