இலங்கை, கொழும்பு, 2021 ஏப்ரல் 9 — இலங்கையின் பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்க்கை கொவிட்-19 தொற்றுநோய் காரணமாக அதிகம் பாதிக்கப்பட்ட போதிலும், சவால்களுக்கு மத்தியிலும்கூட, 2021 ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் மீட்கப்படும் என இன்று வெளியிடப்பட்ட புதிய உலக வங்கியின் இலங்கை அபிவிருத்தி இற்றைப்படுத்தல்: பொருளாதார மற்றும் வறுமை மீதான கொவிட் -19 இன் தாக்கம் (World Bank Sri Lanka Development Update: Economic and Poverty Impact of COVID-19) குறிப்பிடுகின்றது.
தொற்றுநோயால் முன்னெப்போதும் இல்லாதவாறு பொருளாதார வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ள நாடு இப்போது மீட்புப் பாதையில் பயணிக்கின்றது என இலங்கை அபிவிருத்தி இற்றைப்படுத்தல் (SLDU) குறிப்பிடுகிறது. பிரதானமாக வெளிநாட்டு முதலீடுகள் காரணமாகவும் சுற்றுலாத்துறை மற்றும் பிற பொருளாதார நடவடிக்கைகளை இயல்பாக்குகின்றமை காரணமாகவும் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியானது 2021 ஆம் ஆண்டில் 3.4 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், தொடர்ச்சியான வர்த்தக கட்டுப்பாடுகள், மந்தநிலையிலிருந்தான பொருளாதார வடுக்கள் மற்றும் அதிக கடன் சுமை ஆகியவற்றுடன் இரட்டிப்பாகும் மெதுவான உலகளாவிய மீட்பு தொடர்ந்தும் வளர்ச்சியை பாதிக்கலாம்.
இந்த அறிக்கையானது தொற்றுநோயின் பேரழிவு தாக்கத்தை எடுத்துக்காட்டி இலங்கையின் பொருளாதாரம் மற்றும் கண்ணோட்டத்தைப் பற்றிய இற்றைப்படுத்தலை வழங்குகிறது. இலங்கையின் பொருளாதாரம் 2020 ஆம் ஆண்டில் 3.6 சதவிகிதம் சுருங்கியது, இது மிக மோசமான அடைவுச் சாதனையாகும், தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதால் பல நாடுகளிலும் இதே நிலைமை காணப்படுகின்றது.
பணப் பரிமாற்றம் மற்றும் ஒத்திவைக்கப்பட்ட வரி செலுத்துதல் போன்ற நடவடிக்கைகளுடன் அரசாங்கம் தீர்க்கமாக செயல்பட்டது. மத்திய வங்கியின் கடன் தள்ளுபடி மற்றும் கடன் வழங்குவதை ஊக்குவிப்பதற்கான பிற நடவடிக்கைகள் ஆகியவை வணிகங்கள் மற்றும் வாழ்வாதாரங்களில் கொவிட்-19 இன் மோசமான தாக்கத்தை குறைக்க உதவியது. அதே நேரத்தில், தொற்றுநோய்க்கு மத்தியில் அதிகரித்த செலவுகள் மற்றும் குறைந்த வருமானம் ஆகியன நிதி நிலைமை மோசமடைவதில் பங்களித்தன. பொது மற்றும் பொது உத்தரவாத கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 109.7 சதவீதமாக அதிகரித்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. 2021 பெப்ரவரி மாதத்தில் இருப்புக்கள் 11 ஆண்டுகளில் குறைந்த அளவிற்குக் குறைந்துவிட்டன, மேலும் செலாவணி விகிதம் 2021 சனவரி முதல் மார்ச் 17 ஆம் திகதி வரை 6.5 சதவீதத்தினால் குறைந்தது. கொவிட்-19 இற்கு மத்தியில் பொருளாதாரத்தை ஆதரிப்பதற்கும் நிதி நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கும் இடையே சமநிலையை ஏற்படுத்துவது ஒரு முக்கிய சவாலாக உள்ளது.
“உலகெங்கிலும் உள்ள நாடுகளைப் போலவே, கொவிட்-19 இலங்கையின் பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்வாதாரங்களில் முன்னெப்போதும் இல்லாத தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் நாடு மீட்பு கட்டத்திற்குள் நுழையும் போது நாங்கள் ஏற்கனவே சாதகமான அறிகுறிகளைக் காண்கிறோம்” என்று குறிப்பிட்ட மாலைதீவுகள், நேபாளம் மற்றும் இலங்கைக்கான உலக வங்கியின் வதிவிடப் பணிப்பாளராகிய ஃபாரிஸ் எச். ஹதாத்-செர்வோஸ், "தனியார் முதலீட்டின் முழு திறனையும் பெற்றுக்கொள்ளும் ஏற்றுமதி சார்ந்த வளர்ச்சி மாதிரியில் மேம்பட்ட கவனம் செலுத்துவதன் மூலம், இலங்கை அதன் போட்டித்தன்மையை அதிகரிக்கவும், வளர்ச்சியை நிலையான முறையில் உயர்த்தவும் முடியும்" என்றும் குறிப்பிட்டார்.
இற்றைப்படுத்தலில் கொவிட்-19 வறுமையில் ஏற்படுத்தும் தாக்கம் பற்றிக் கலந்துரையாடும் ஒரு சிறப்பு கவனம் செலுத்தப்படும் பிரிவும் உள்ளது. தொழில்களை இழந்து வருமானம் குறைவடைவதால், குறிப்பாக நகர்ப்புறங்களில் மற்றும் தனியார் துறை ஊழியர்கள் மற்றும் முறைசாரா தொழிலாளர்கள் மத்தியில், 3.20 டொலர் வறுமை விகிதமானது 2019 ஆம் ஆண்டில் 9.2 சதவீதமாகவிருந்தது 2020 ஆம் ஆண்டில் 11.7 சதவீதமாக உயர்வடைந்துள்ளது என்று கணிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய சமூகப் பாதுகாப்பு முறைமையானது தொழிலை இழந்தவர்களை மீண்டும் ஒருங்கிணைப்பதை ஆதரிக்கக்கூடும் என்று அறிக்கை குறிப்பிடுகிறது. நெருக்கடியான காலங்களில் ஏழைகளுக்கும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கும் வழங்கும் ஆதரவை விரைவாகவும் வினைத்திறனாகவும் அதிகரிக்க அதிகாரிகளுக்கு, அதிக இலக்கு வைக்கப்பட்ட சமூக பாதுகாப்பு வலைகள் உதவக்கூடும் என்று அது ஆலோசனை வழங்குகின்றது. டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மற்றும் கல்வியறிவு ஆகியவற்றில் முதலீடு செய்வது இலங்கையர்களுக்கு புதிய பொருளாதார வாய்ப்புகளைக் கண்டறிய உதவும்.
இலங்கை அபிவிருத்தி இற்றைப்படுத்தல் (The Sri Lanka Development Update) என்பது உலக வங்கி வெளியீடாகும், இது நாட்டின் சமீபத்திய பேரினப் பொருளாதார அபிவிருத்திகள் மற்றும் கண்ணோட்டம், மற்றும் தொடர்புடைய அபிவிருத்திச் சவால்கள் பற்றிக் கலந்துரையாடுகின்றது. இது தேர்ந்தெடுக்கப்பட்ட பொருளாதார மற்றும் கொள்கைச் சிக்கல்களையும் இன்னும் ஆழமாக ஆராய்கிறது.
இலங்கை அபிவிருத்தி இற்றைப்படுத்தல் (The Sri Lanka Development Update) என்பது இது தெற்காசியா பிராந்தியத்தில் பொருளாதார அபிவிருத்திகள் மற்றும் வாய்ப்புகளை ஆராய்ந்து நாடுகள் எதிர்கொள்ளும் கொள்கைச் சவால்களை பகுப்பாய்வு செய்யும், ஆண்டுக்கு இரு முறை வெளியிடப்படும் உலக வங்கி அறிக்கையாகிய தெற்காசிய பொருளியல் நோக்கின் (South Asia Economic Focus) ஒரு துணைப் பகுதியாகும். 2021 மார்ச் 31 ஆம் திகதியன்று ஆரம்பிக்கப்பட்ட தெற்காசியா தடுப்பூசியேற்றுகின்றது (South Asia Vaccinates) என்ற தலைப்பிலான 2021 வசந்தகால பதிப்பு தெற்காசியாவில் பொருளாதார நடவடிக்கைகள் மீண்டும் முன்னேறி வருகின்றது, ஆனால் வளர்ச்சி சீரற்றதாகவும், மீட்பு பலவீனமாகவும் உள்ளது, பொருளாதாரக் கண்ணோட்டம் நிலையற்றதாகவும் உள்ளதாகக் காட்டுகின்றது. தடுப்பூசிப் பயன்பாட்டின் வெவ்வேறு பரிமாணங்கள் குறித்தும் இந்த அறிக்கை கவனம் செலுத்துவதுடன் பிராந்தியத்தில் தடுப்பூசி வழங்குவதன் செலவுப்-பயன் பகுப்பாய்வொன்றையும் வழங்குகின்றது.
- முற்றும்-