நலன்புரி நன்மைச் சபையானது (WBB) கூறுபடுத்தப்பட்ட சமூகப் பாதுகாப்பு முறைமையை நெறிப்படுத்தவும் வினைத்திறனை அதிகரிக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவும் உலக வங்கியின் நிதியுதவியிலான சமூக பாதுகாப்பு வலையமைப்பு செயற்திட்டத்தின் உதவியுடன் நிறுவப்பட்டதாகும். நலன்புரி நன்மைகள் தகவல் முறைமையானது (WBIS) அனைத்து வகையான அரசாங்க பணப் பரிமாற்றங்களையும் ஒருங்கிணைத்து பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக மாற்றும் வகையில் நலன்புரி நன்மைச் சபையின் WBB கீழ் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் பணம் பெறுபவர்கள் அரச அலுவலகங்களில் வரிசையில் நிற்காமல், எப்போது வேண்டுமானாலும் பணத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். நலன்புரி நன்மைகள் தகவல் முறைமையின் (WBIS) ஒரு பகுதியாக, சமூகப் பாதுகாப்பைக் கோருபவர்களின் தகவல்கள் டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டு, பணப் பரிமாற்றல் பெறுபவர்களின் பட்டியலை அரசாங்கம் தொடர்ந்து மீளாய்வு செய்து இற்றைப்படுத்த அனுமதிக்கிறது. விண்ணப்பதாரர்களிடமிருந்து தரவைச் சேகரிப்பதற்கு QR குறியீடுகள் மற்றும் Aswasuma மொபைல் செயலி பயன்படுத்தப்படுகிறது.
2. முறைமையில் பலமான நிர்வாகம், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புடைமையை உருவாக்குதல்
இலங்கையில் தற்போதுள்ள சமூகப் பாதுகாப்பு முறைமையானது நாட்டின் 50% க்கும் அதிகமான வறியவர்களை உள்ளடக்காமல் ஒதுக்கியுள்ளதுடன், வறயோர் அல்லாதவர்களுக்கு நன்மைகளை வழங்குகிறது. அத்தகைய ஒதுக்கல் மற்றும் உள்ளீர்ப்பு பிழைகளுக்கு ஒரு முக்கிய காரணம் தகுதியை நிர்ணயிப்பதில் அரசியல் செல்வாக்கு பயன்படுத்தப்படுவதாகும்.
“நான் ஆளும் அரசியல் கட்சிக்காக [அப்போது] வேலைசெய்யத் தொடங்கும் வரை எனக்கு சமுர்த்தி கிடைக்கவில்லை. தேர்தல் நேரத்தில் அமைச்சர்களுடன் இணைந்து செயற்படும் முக்கிய நபர் ஒருவர் இருந்தார். யாருக்கு சமுர்த்தி வழங்கப்பட வேண்டும் என்பதை அவரிடம் சென்றே சமுர்த்தி உத்தியோகத்தர் பார்க்க வேண்டியிருந்தது”
- Lirne Asia அண்மையில் மேற்கொண்ட கணக்கெடுப்பொன்றின் போது பதிலளித்த ஒருவர்
இதை நிவர்த்தி செய்வதற்கு, தகுதியைத் தீர்மானிப்பதற்கும், தெரிவுச் செயன்முறையில் அரசியல் செல்வாக்கை நீக்குவதற்கும் இன்னும் விரிவான அளவுகோல்களைப் பின்பற்ற வேண்டும். 2023 இல், நலன்புரி நன்மைகள் சபையானது (WBB) தகுதியான பயனாளிகளை அடையாளம் காண முழு நாட்டையும் உள்ளடக்கிய தரவுகளை சேகரிக்கத் தொடங்கியது. வீட்டு மட்டத்தில் சேகரிக்கப்பட்ட சரிபார்க்கக்கூடிய தரவு மூலம் மதிப்பிடப்பட்ட விண்ணப்பதாரர்களின் பல பரிமாண வறுமை நிலைகளின் (multidimensional poverty levels) அடிப்படையில் நலன்புரி நன்மைகள் சபை தகுதியை தீர்மானிக்கிறது. (இது வறுமை பற்றிய முழுமையான கருத்தைப் பெற்றுக்கொள்ள பண வறுமை, கல்வி மற்றும் அடிப்படை உட்கட்டமைப்பு சேவைகள் ஆகியவற்றில் உள்ள பற்றாக்குறையைக் கருத்திற் கொள்ளும் ஒரு நடவடிக்கையாகும்.) எனவே இந்த முறைமை வெளிப்படையானதாகவும் அரசியல் செல்வாக்கு அற்றதாகவும் உள்ளது.
பழைய முறைமையின் கீழ் 43% மக்களே உள்வாங்கப்பட்டனர். அதனுடன் ஒப்பிடும்போது தற்போது மிகக் குறைந்த வருமானம் பெறும் பிரிவில் சுமார் 60% (அல்லது வறுமையில் உள்ள மக்கள் தொகையில் கீழ் நிலையில் உள்ள ஐந்தில் ஒரு பகுதியினர்) பணப் பரிமாற்றங்களைப் பெற தகுதியுடையவர்கள் என உலக வங்கி மதிப்பீடு செய்துள்ளது. இந்த முறைமை வறிய மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதற்காக, தகுதி அளவுகோல் மற்றும் இலக்கு முறையியல் ஆகியவை கிரமமாக ஒழுங்கான இடைவெளியில் மறுமதிப்பீடு செய்யப்பட வேண்டும் என்பதோடு, மேலும் வலுவானதாகவும் இருக்க வேண்டும்.
3. பிரஜைகளை ஆரம்பமாகவும் தொடர்ச்சியாகவும் ஈடுபடுத்தல்
நெருக்கடிகளின் போது வறிய மக்களைப் பாதுகாப்பதற்கும் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும் ஒரு வினைத்திறனான மற்றும் வெளிப்படையான சமூகப் பாதுகாப்பு முறைமை மிகவும் அவசியமானதாகும். ஆனால் அத்தகைய முறைமையை நிறுவுவது படிப்படியானதொரு செயன்முறையாகும். இத்தகைய முறைமை சிவில் சமூக அமைப்புகள் (CSOs) உட்பட பல்வேறு பங்குதாரர்களுடன் வெளிப்படையான செயன்முறைகள் மற்றும் தொடர்ச்சியான ஈடுபாட்டுடன் ஆரம்பிக்கிறது.
இலங்கை அதன் சமூகப் பாதுகாப்பு முறைமையை திருத்தம்செய்து வருகின்றது என்ற வகையில், ஒரு சமூகப் பாதுகாப்பு முறைமை எவ்வாறு சிறந்த முறையில் அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும் என்பதைப் பற்றிய கருத்துக்களைப் பெறுவதற்கு பிரஜைகளை ஈடுபடுத்துவதற்கான வழிமுறைகளைப் பயன்படுத்த வேண்டும். இயற்கை அனர்த்தங்கள் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் போன்ற அதிர்ச்சிகளால் மோசமாகப் பாதிக்கப்படுபவர்களுக்கான உதவியை உறுதிப்படுத்தி, முறைமையானது மாற்றியமைக்கத்தக்கதானதாகும் என்பதை இது உறுதி செய்கிறது. சமூகப் பாதுகாப்பில் உலக வங்கியின் உலகளாவிய அனுபவமானது, செயற்திறமான பிரஜைகள் ஈடுபாட்டைக் கொண்டிருப்பது, தாங்குதிறன் கொண்ட மற்றும் மாற்றியமைக்கத்தக்க சமூகப் பாதுகாப்பு முறைமைகளை நிறுவுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதைக் காட்டுகிறது. உதாரணமாக, சிலி, பாக்கிஸ்தான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் பெரும்பாலான மக்கள் ஏழை மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு உதவி வழங்குவதற்காக, ஒரு தற்காலிக அடிப்படையில் மேலும் அதிகமான மக்களை பதிவேட்டிற்குள் கொண்டுவர வேண்டிய நெருக்கடி நேரங்கள் உட்பட, WBIS க்கு நிகரான சமூகப் பதிவேடுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
முறைமையின் பொறுப்புடைமையை உறுதி செய்வதில் பிரஜைகளுக்கும் ஒரு பங்கு உண்டு. சமூகப் பாதுகாப்பு முறைமை உண்மையில் களத்தில் எவ்வாறு செயற்படுகிறது என்பதைப் பற்றி அவ்வப்போது மீளாய்வு செய்வதற்கும், குறைகளைக் கையாளும் ஒரு பொறிமுறையை உருவாக்குவதற்கு பிரஜைகளின் கருத்துக்களை உள்ளடக்குவது அவசியமானதாகும். நலன்புரி நன்மைகள் சபையானது முறைமையில் உள்ள பிரச்சினைகள் மற்றும் தொடர்ச்சியான சிக்கல்களைக் முறையிட ஒரு குறை தீர்க்கும் பொறிமுறையை அமைப்பதுடன், அதனால் குறைகளை நிவர்த்திக்க முடியும்.
பல வருடங்களாக இலங்கை அதன் மோசமான பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டெழுவதற்காக செயற்பட்டு வரும் நிலையில், இலங்கையின் வறிய மற்றும் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு மிகவும் நன்மையளிக்கக்கூடிய தாங்குதிறன் கொண்ட மற்றும் நியாயமான சமூகப் பாதுகாப்பு முறைமையொன்றைக் கட்டியெழுப்புவதற்கான சந்தர்ப்பமாக இந்த நெருக்கடி நிலைமையை மாற்றுவதற்கு இதுவே சரியான நேரமாகும்.