வாழ்வாதாரம் மற்றும் நலன்களை மேம்படுத்துவதில் இலங்கை பெரும் முன்னேற்றம் அடைந்தது
வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதிலும், வறுமையைக் குறைப்பதிலும் இலங்கை சிறந்த வரலாற்றைப் படைத்துள்ளது. கோவிட் -19 நெருக்கடிக்கு முன்னைய தசாப்தத்தில் வறுமை குறைந்து வந்தது. 2012/13 இல் 16.2 சதவிகிதத்தில் இருந்த ஏழைகளின் பங்கு 2016 இல் 11 சதவிகிதமாகக் குறைந்தது - உலக வங்கியின் $3.20 சர்வதேச வறுமைக் கோட்டில் (2011 PPP யில்) அளவிடப்பட்டது.
இந்த எண்ணிக்கை 2019 இல் 9.2 சதவிகிதமாகக் குறைந்துவிட்டதாக கணிப்புகள் தெரிவிக்கின்றன. நல்வாழ்வின் பிற நடவடிக்கைகளும் முன்னேற்றத்தை வெளிப்படுத்தியுள்ளன - கடந்த தசாப்தத்தில் தாய் மற்றும் குழந்தை ஆரோக்கிய பெறுபேறுகள் மேம்பட்டதுடன் மின்சாரத்திற்கான அணுகல் தற்போது கிட்டத்தட்ட உலகளாவியதாகவுள்ளது. இவை மிகவும் பாராட்டத்தக்க அடைவுகள்.
நலன்புரியில் இத்தகைய பரந்த அடிப்படையிலான முன்னேற்றங்கள் ஏற்படுவது, பொதுவாக வாழ்வாதாரங்களின் முன்னேற்றங்களினால் ஆகும். “நிலைபேறான வறுமை குறைப்புக்குப் பின்னால் உள்ள முக்கிய காரணி குறிப்பாக பண்ணை அல்லாத துறைகளில் தொழிலாளர்-வருமான வளர்ச்சி ஆகும். உற்பத்தித்திறன் மேம்பட்டதுடன் தொழிலாளர்கள் விவசாயத்தில் இருந்து சிறந்த ஊதியம் பெறும் துறைகளுக்கு நகர்ந்தனர்-இந்த செயல்முறை பொருளாதார மாற்றம் என விவரிக்கப்படுகிறது” என்கிறார் உலக வங்கியின் சிரேஷ்ட பொருளாதார நிபுணர் யியோன் சூ கிம். கடந்த தசாப்தம் ஈர்க்கக்கூடிய ஆற்றல் மூலம் வகைப்படுத்தப்பட்டது. உட்கட்டமைப்பு முதலீடுகள், சந்தைகள் மற்றும் சேவைகளுக்கான அணுகலை மேம்படுத்தின, பண்ணை அல்லாத துறைகளில் வாய்ப்புகள் விரிவடைந்தன, குறிப்பாக, சுற்றுலாப் பயணிகளின் வருகை 10 வருடங்களுக்குள் நான்கு மடங்கு அதிகரித்ததால், இலங்கை முன்னணி சுற்றுலாத் தலமாக மாற்றமடைந்தது. அத்துடன் “பகிர்வு பொருளாதாரம்" அறிமுகப்படுத்தப்பட்டது. அத்துடன் Uber, PickMe மற்றும் Airbnb போன்ற சேவைகள் நகர்ப்புறங்களில் பிரபலமானது.
கோவிட் -19 நெருக்கடி குறிப்பிடத்தக்க பின்னடைவுக்கு வழிவகுத்ததால் வறுமை மற்றும் சமத்துவமின்மை அதிகரித்தது
இருப்பினும், பொருளாதாரம் மிக மோசமான இறுக்கத்தை பதிவு செய்ததால் கோவிட் -19 பல ஆண்டு கால முன்னேற்றத்தை திடீரென நிறுத்த வழிவகுத்தது. தொற்றுப் பரவல் ஆரம்பித்த உடனேயே தொழில்வாய்ப்புகள் மற்றும் வருமான இழப்புகள் பரவலாகின. $3.20 ஏழைகளின் பங்கு 2020 இல் 11.7 சதவிகிதம் அல்லது அரை மில்லியனுக்கும் அதிகமான மக்களால் அதிகரித்திருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது - இது ஐந்து வருட மதிப்புள்ள முன்னேற்றத்திற்கு சமமான பாரிய பின்னடைவாகும்.
அதிக முறைசாராமை மற்றும் பலவீனமான பாதுகாப்பு முறைகள் காரணமாக பணியாளர்களிடையே பாதிப்பு அதிகமாக இருந்தது, இது அதிர்ச்சிகளைச் சமாளிக்கும் திறனைக் குறைக்கிறது. தொற்றுநோயைக் கட்டுப்படுத்தவும் பொருளாதார அதிர்ச்சியைத் தடுக்கவும் அரசாங்கம் விரைவாகச் செயல்பட்டது, ஆனால் முழுமையான தாக்கத்தை ஈடுசெய்வதற்கான நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை. இந் நிலை அதிகரிக்க சமத்துவமின்மையும் வழிவகுத்துள்ளது.