இன்று கொழும்பிலிருந்து நேரடியாக இந்தியாவின் 14 நகரங்களிற்கு விமானசேவைகள் உள்ளன.வாராந்தம் 147 விமானபயணங்கள் இடம்பெறுகின்றன.இவ்வாறான வலுவான தொடர்பு தென்னாசியாவிற்கு புதிய விடயம்.உதாரணத்திற்கு கொழும்பிற்கும் காத்மண்டுவிற்கும் இடையிலோ அல்லது காபுல் அல்லது பரோவிற்கு( பூட்டானின் ஒரேயொரு சர்வதேச விமானநிலையம் அமைந்துள்ள பகுதி) இடையிலோ நேரடி விமான சேவைகள் இல்லை.
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான பரஸ்பர வான் தொடர்பு என்பது பலகாலமாக சிந்திக்கப்பட்ட விடயம்.இலங்கை ஒரு வாய்ப்பை உணர்ந்து அதனை தழுவிக்கொண்டது.விமான சேவை தாராளமயப்படுத்தலிற்கு பலம் சேர்க்கும் வகையில் இலங்கைக்கு வந்த பின்னர் இந்திய பயணிகளிற்கு விசா வழங்கும நடைமுறையை 2003 முதல் ஆரம்பித்தது.
இன்று பிராந்தியத்தின் ஏனைய நாடுகள் மத்தியில் காணப்படும் பரஸ்பர விமானசேவைகளைவிட இலங்கை இந்தியாவிற்கு இடையிலான முன்னணியில் காணப்படுகின்றது.2005 ம் ஆண்டிற்கு பின்னர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் இந்திய சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளது இதன்காரணமாக இலங்கைக்கு அதிகளவு சுற்றுலாப்பயணிகள் விஜயம் மேற்கொள்ளும் நாடாக இந்தியா மாறியுள்ளது.இதேவேளையில் விமானங்கள் மூலம் கொண்டு செல்லப்படும் பொருட்களின் அளவு அதிகரித்துள்ளதுடன் விமானகட்டணங்களின் விலை குறைவடைந்துள்ளது.
உலகவங்கியின் புதிய அறிக்கையான பாதிநிறைந்த கண்ணாடிப்பாத்திரம் - தென்னாசிய பிராந்திய வர்த்தகத்திற்கான நல்வாய்ப்புகள் என்பதில் பதிவாகியிருக்கும் வெற்றிக்கதைகளில் ஒன்று இது.இந்த அறிக்கை யதார்த்தபூர்வமான விடயங்களை மையப்படுத்தியதாக காணப்படுகின்றது.இது திறந்த பிராந்தியவாதத்திற்கான வாய்ப்புகள் குறித்து ஆராய்கின்றது.கொள்கை வகுப்பாளர்கள் பிராந்தியத்தில் பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதற்கும் ஆழமான சர்வதேச ஒருங்கிணைப்பை ஊக்குவிப்பதற்கும் இதனை எவ்வாறு ஆகக்கூடியளவிற்கு பயன்படுத்தலாம் என ஆலோசனை வழங்குகின்றது.
இந்த அறிக்கையை வெளியிடும் நிகழ்வின் போது இலங்கை மற்றும் மாலைதீவிற்கான உலக வங்கியின் இயக்குநர் -உலகின் மிகவும் குறைந்த அளவு இணைக்கப்பட்ட பகுதியாக எப்படி தென்னாசியா விளங்குகின்றது என்பதை சுட்டிக்காட்டினார்.கிழக்காசியாவின் மொத்த வர்த்தகத்தில் பிராந்திய வர்த்தகத்தின் பங்களிப்பு 50 வீதமானதாக காணப்படுகின்றது அதேவேளை தென்னாசிய வர்த்தகத்தில் இது ஐந்து வீதத்திற்கும் சற்று அதிகமாக காணப்படுகின்றது.உலகின் வறிய மக்களின் 33 வீதமானவர்கள் வாழும் பிராந்தியத்திற்கு இது தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.