உயர்-நடுத்தர வருமான மட்டத்தினை அடைவதற்கு, இலங்கையானது புதிய வளர்ச்சி மாதிரியினை நடைமுறைப்படுத்த வேண்டியதுடன், பொருளாதாரத்தின் போட்டித்தன்மையினையும் மேம்படுத்த வேண்டியுள்ளது .
அதனடிப்படையில், Vision 2025 இல் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள விரிவானதும், இலட்சிய வேட்கையுடையதுமான சீர்திருத்தங்களை அரசாங்கமானது நடைமுறைப்படுத்த ஆரம்பித்துள்ளதுடன், குறிப்பாக, மேலதிகத் தீர்வைகளை நீக்குதல், முதலீடு, வர்த்தகம், புதிய வியாபாரங்களை ஆரம்பிப்பதிலான நடைமுறைகளை எளிதாக்குதல் மற்றும் வேகப்படுத்தல் போன்றவை முக்கிய இடம்பெறுகின்றன.
இந்தப் பொருளாதார சீர்திருத்தங்களின் மூலம், போட்டித்தன்மையினை மேம்படுத்தல், ஆட்சி அதிகாரம் மற்றும் நிதி நிர்வாகத்தினை முறைப்படுத்தல் போன்ற நீண்ட கால நலன்களைக் கொண்டுவருவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றன.
இருப்பினும், சவாலான உள்நாட்டு அரசியல் சூழலானது, சீர்திருத்த நடவடிக்கைகள் மந்த கதியில் இடம்பெறக் காரணமாவதுடன், உறுதியான நடுத்தர காலக் கண்ணோட்டத்தினையும் சிக்கலாக்கியுள்ளது. எதிர்வரும் காலங்களிலான தேர்தல் சுழற்சியானது இந்த நிலைமையினை மேலும் இக்கட்டுக்குள்ளாக்குகிறது.
வரி நிர்வாகத்தை மேம்படுத்துவத்திலான தாமதங்கள் இலங்கை அரசாங்கத்தினால் எதிர்நோக்கப்படும் பிரதான பொருளாதார சவால்களுள் ஒன்றாகும். தொடர்ச்சியான சீரற்ற காலநிலை நிகழ்வுகள் மற்றும் இயற்கை அனர்த்தங்கள், பொருளாதார வளர்ச்சி, வரவு செலவுத் திட்டம், வெளியுறவுத்துறை மற்றும் வறுமைக் குறைப்பு போன்றவற்றில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
இது தவிர, வயோதிப சனத்தொகை அதிகரிப்பு போன்ற சனத்தொகையிலான மாற்றங்கள் காரணமாக, ஓய்வூதியம் மற்றும் சுகாதாரப் பராமரிப்புக்கான அரசாங்கத்தின் எதிர்கால செலவினங்கள் மென்மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறான நிலைமைகளை எதிர்கொள்வதற்கு, வருவாயினை மென்மேலும் அதிகரித்தல் மற்றும் பொருளாதார வளர்ச்சியினை ஊக்குவிக்கும் அரச முதலீடுகளுக்கு முன்னுரிமையளித்தல் என்பவை உள்ளடங்கலான நிதி மற்றும் பொருளாதார ஒருங்கமைப்பில் இலங்கையானது தொடர்ச்சியாக முதலீடுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
பொதுத்துறை மற்றும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களிலான நிதி இடர்கள்
மொத்த உள்நாட்டு உற்பத்தியிலான அரசாங்கத்தின் கடன் விகிதமானது 77.6 சதவீதமாகக் குறைவடைந்த போதிலும், ஏனைய நடுத்தர வருமான மட்டத்தினையுடைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இவ்விகிதமானது அதிகரித்துக் காணப்படுகிறது. புதிய நிதிப் பொறுப்பு மற்றும் மேலாண்மை சட்டத்தின் அமுலாக்கமானது 2019 மற்றும் 2022 இல் முதிர்ச்சியடையும் யூரோ கடன்பத்திரங்களை மீளச் செலுத்துவத்திலான இடர்களை சமாளிப்பதற்கு அவசியமாகின்றது.
(SOE) மிகுந்த சிரமத்தின் மத்தியில் இயங்கி வருவதுடன், எரிபொருள் மற்றும் மின்சார செலவினங்கள் சேவைத்துறையின் விலை நிர்ணயத்தில் கருத்திற்கொள்ளப்படாமை மற்றும் வினைத்திறனற்ற நிர்வாக நடவடிக்கைகள் காரணமாக SOE துறையின் கடனானது அதிகரித்து வருகிறது. அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட எரிபொருள் செலவினங்களை உள்ளடக்கிய விலை நிர்ணயமானது நிதி இடர்கள்களைக் குறைப்பதற்கான முக்கியமான நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.
SOE துறையின் கடன்கள், நிச்சயமல்லாத நிதிப் பொறுப்புகள் மற்றும் இயற்கை அனர்த்தங்களிலான தாக்கங்கள் என்பவற்றை கட்டுப்படுத்துவதற்காக ஒருங்கிணைந்த இடர் மேலாண்மை அணுகுமுறையொன்று அவசியமாகின்றது. எரிபொருள் மற்றும் மின்சார செலவினங்களை உள்ளடக்கிய விலை நிர்ணயத்தினை தாமதமின்றி அறிமுகப்படுத்தல் மற்றும் ஒருங்கிணைந்த கடன் நிர்வாக அலுவலகமொன்றை நிறுவுதல் இதன் போது முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன.
உள்நாட்டில் வட்டி விகிதங்கள் அதிகரித்துவரும் நிலையில், சர்வதேச நிதிக் கட்டுப்பாடுகள் மற்றும் நாணயமற்று விகிதத் தேய்வு போன்ற சவால்களை எதிர்கொள்வதற்கு நிதிக் கட்டுப்பாடுகள் அவசியமாகின்றன. தொடர்ச்சியான நிதி மற்றும் பொருளாதார ஒருங்கமைப்பின் மூலம் நடுத்தர காலத்துக்கான கடன் சுமையினைக் குறைக்க முடிகிறது.
உயர்-நடுத்தர வருமான மட்டத்தினை அடைவதற்கு சிறந்த தொழில் வாய்ப்புகள் அவசியமாகின்றன
கடந்த பத்து ஆண்டுக் காலப்பகுதியில், இலங்கையின் வேலையின்மை விகிதமானது ஆண்டொன்றுக்கு சராசரியாக 0.5 சதவீதத்தினால் குறைவடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. தொழிலாளர் படையில் குறைவான பெண்களின் பங்களிப்பு மற்றும் அதிகரித்து வரும் இளைஞர் வேலையின்மை, இலங்கையின் வேலையின்மை விகிதத்திற்கு முக்கிய காரணங்களாக அமைகின்றன. இலங்கையானது தனியார் முதலீட்டு வர்த்தகத் துறையினை அடிப்படையாகக் கொண்ட புதிய வளர்ச்சி மாதிரியினைப் பின்பற்றத் தயாராகிவரும் வேளையில், பாரிய, நிபுணத்துவம் வாய்ந்த தொழிலாளர் படையானது, பொருளாதார வளர்ச்சிக்கும், வயோதிப சனத்தொகை அதிகரிப்பு போன்ற சனத்தொகையிலான மாற்றங்களிலான சவால்களை எதிர்கொள்வதற்கும் அவசியமாகிறது.
வெளிநாட்டு முதலீடுகளை (FDI) கவருவதன் மூலம், பிராந்திய மற்றும் சர்வதேச ரீதியிலான மதிப்புச் சங்கிலிகளில் இணைதல், வர்த்தகம், புத்தாக்கம், மற்றும் முயற்சியாண்மை போன்றவற்றுக்கு உகந்த சூழலை ஏற்படுத்திக் கொடுத்தல் மூலம் புதிய தொழில் வாய்ப்புகளை அதிகரிக்கக் கூடியதாகவுள்ளது.
அத்தோடு, உயர்-நடுத்தர வருமான மட்டத்தினை அடைவதற்கு, தொழிலாளர் படையிலான பெண்களின் பங்களிப்பினை ஊக்குவித்தல் மற்றும் தொழில்சார் திறன்களுடன் மாணவர்களை தயார்படுத்தல் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன.
பிராந்திய ரீதியிலான ஏற்றத் தாழ்வுகள் இன்னமும் களையப்படாது உள்ளன. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இதனை அவதானிக்கக் கூடியதாகவுள்ளதுடன், இம் மாகாணங்களிலான வேலைவாய்ப்பு விகிதமானது தேசிய சராசரியுடன் ஒப்பிடுகையில் முறையே 44 மற்றும் 42 ஆக இருப்பதுடன், மேல் மாகாணம் மற்றும் ஏனைய மாகாணங்களில் இந்த விகிதமானது 50 மற்றும் 54 ஆகக் காணப்படுகின்றது. உள்நாட்டுப் போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட இம் மாகாணங்களில் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான தேவை இதன் மூலம் தெளிவாகப் புலப்படுகின்றது.
பொருளாதார சீர்திருத்தங்களின் மூலம், இலங்கையானது நிபுணத்துவம் வாய்ந்த, போட்டித்தன்மையான, சமூக ஏற்றத் தாழ்வுகளற்ற, தொழில் வாய்ப்புகளில் சமவுரிமையளிக்கும் தொழிலாளர் படையினைக் கொண்ட நாடாக மாற்றமடைவது திண்ணம்.