சர்வதேச மகளிர் தினத்தின் #PressForProgress திட்டத்தின் ஒரு அங்கமாக இலங்கையிலுள்ள உலக வங்கியின் அலுவலகம் இலங்கையில் பெண் தொழிலாளர்களின் தொழில்சார் பங்களிப்பை எவ்வாறு சீர்ப்படுத்துவதுடன் சந்தர்ப்பங்களையும் முன்னுரிமைகளையும் அதிகரிக்கலாம் என்பது பற்றிய கருத்துக்களை அறிய இலங்கையர்களை அழைத்திருந்தது. இந்தக் கருத்துக்கணிப்பின் இன்னொரு நோக்கமாக இலங்கையில் பெண்களை வேலைத்தளங்களில் இருந்து புறந்தள்ளி வைத்துள்ள காரணிகளை அடையாளம் காண்பதும்,பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய தொழில்களைப் பெற்றுக்கொள்வதற்கான உதவியை வழங்குவதற்கான உறுதியான படிகளை எடுப்பதுமாகும்.
இந்தக் கருத்துக்கணிப்பையும் உங்களது முன்மாதிரி யார் என்ற நிழற்படப் போட்டி முடிவையும் அறிவித்த வலைப்பதிவு ஒன்றில் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான தேசப் பணிப்பாளராக இடா ஸ்வராய் ரிடிஹாவ், இலங்கையானது விரைவாக வயதடைந்து வருவதன் காரணமாக, இலங்கையின் தன்னிறைவானது தொழிலாளர் சக்தியாக இணைந்து கொள்ளும் பெண்களிலேயே தங்கியிருப்பது பற்றி வலியுறுத்தி "இலங்கையானது பணக்கார நாடாக மாறுமுன்னரே வயது முதிர்ந்தோரைக் கொண்ட நாடாகிவருகிறது.போதுமானளவு தொழிலாளர் இல்லாமல் இந்நாடு போட்டியிடும் தன்மையைக் கொள்ள முடியாது. இதனால் அடிப்படையான சேவைகளை வழங்குவதும் சேவைகளை வழங்குவதற்குத் தேவைப்படும் வருமானத்தைப் பெற்றுக்கொள்வதிலும் இடர்ப்பாடுகளை சந்திக்கவேண்டியிருக்கும்" என்று குறிப்பிட்டிருந்தார்.
எமக்கு கிடைத்த பதில்களில் நாம் திருப்தியடைந்தோம். எனினும் இன்னும் அதிக பதில்கள் கிடைத்திருந்தால் மிக மகிழ்ந்திருப்போம்.பதிலளித்த 239 பேரில் 169 பேர் பெண்கள், 69 பேர் ஆண்களாவர்.இவர்களில் அநேகர் 25 முதல் 35 வயதுடையவராகவும் பலர் பட்டதாரிகளாகவோ, பின் பட்டதாரிகளாவோ இருந்தனர்.
பெண்கள் தொழில்களுக்குச் செல்வதில் இருக்கும் 3 முக்கியமான சவால்களைப் பற்றி கேட்ட போது, பதிலளித்தோரில் 46% மானோர் பெற்றோராயிருத்தல் மற்றும் குழந்தைப் பராமரித்தல் என்பதையும், சமூக கலாசார விதிமுறைகளை 21%மானோரும், அதற்கடுத்தபடியாக வேலைத்தளங்களில் பாலியல் தொந்தரவுகளையும் (15%) குறிப்பிட்டிருந்தனர்.
ஆண்களும் பெண்களும் தமக்கிடையில் பொறுப்புக்களைப் பகிர்ந்துகொள்ளவேண்டும்
"இங்கே பெண்ணானவள் பாரம்பரியமாக எதிர்பார்க்கப்படுவதை போல வீடுகளில் 100 வீதப் பொறுப்பை நிறைவேற்றவேண்டும் (தினசரி சமையல், குழந்தை மற்றும் வயதானவர்களைப் பராமரித்தல் ) என்றும் அதேபோல அலுவலகத்திலும் தனது 100 வீதப் பங்களிப்பை வழங்கவேண்டும் என்று இருக்கிறது" என்று பதிலளித்தவர்களில் ஒருவர் கூறினார்.
எனவே, பெண்களும் ஆண்களும் பெற்றோராகினாலும் பெண்கள் தான் பிரதான குழந்தைப் பராமரிப்பாளராக இருக்கவேண்டும் என்றொரு எண்ணம் நிலவுகிறது."எனது பெண் நண்பிகள் பலரிடம் வேலைக்கான நேர்முகத் தேர்வுகளில் அவர்கள் என்ன வயதில் திருமணம் செய்யவுள்ளார்கள் என்றும் எத்தனை குழந்தைகளைப் பெறும் எண்ணம் கொண்டுள்ளார்கள் என்றும் கேட்கப்பட்டது" என்றார் பதிலளித்தொரில் இன்னொருவர்.
சமாளித்து தொடர்ந்தும் வேலைக்குச் செல்வோரில் பலர் இன்னும் கடினமான சவால்களை சந்திக்கின்றனர். பதிலளித்தோர் வீட்டிலும் வேலைத்தலங்களிலும் பொறுப்புக்களை மாறி மாறிக் கையாள்வது (89%), நீண்ட பனி நேரம் மற்றும் மேலதிக நேரம் வேலை செய்வதிலுள்ள சிரமங்கள் (73%) மற்றும் குழந்தைப் பராமரிப்புக்கு தகுந்த வழிகளைக் கண்டறிவதிலுள்ள சிரமங்கள் (79%) ஆகியவற்றை மிகப் பெரிய சவால்களாக அடையாளப்படுத்தினர். நெகிழ்வுத்தன்மை இல்லாத தொழில் கொள்கை மற்றும் பொறிமுறை கொண்ட தொழிலிடங்கள் காரணமாக சிறுகுழந்தைகள் மற்றும் மிக இளவயதுப் பிள்ளைகளைக் கொண்ட தாய்மார் பிள்ளைப் பேற்றுக்குப் பிறகு மீண்டும் தொழிலுக்குத் திரும்புவதில் சிரமத்தை எதிர்கொள்கின்றனர் என்றார் இன்னொருவர்.
ஆண்களும் பெண்களும் திருமண மற்றும் தொழில்சார் வாழ்க்கைக்கான சமநிலையை எப்படி பேணிக்கொள்ளலாம் என்று கேட்கப்பட்டபோது, மிகப்பெரும்பான்மையானோர் சொன்ன பதில் ஆண்களும் பெண்களும் குடும்பப் பொறுப்புக்களை சரிசமனாகப் பகிர்ந்துகொள்வதன் மூலம், இருவரும் தமது வருமானம் மூலம் குடும்பத்துக்குப் பங்களிக்கலாம் என்பதே. 85%க்கும் அதிகமானோர், பெண்கள் மீண்டும் வேலைக்குத் திரும்புவதானால் குடும்பப் பொறுப்புக்களை வீட்டில் பகிர்ந்து கொள்வது மிக இன்றியமையாதது எனத் தெரிவித்தனர்.
ஆனால் சமநிலையான இந்தப் பகிர்வுக்கு பிரதான அடிப்படியாக அமைவது குடும்ப நிலையில் அணுகுமுறைகளில் ஏற்படுத்தவேண்டிய அவசிய மாற்றங்கள்.
"தந்தையாக பொறுப்பேற்றல் மற்றும் வீட்டில் பால்நிலை வகைமையில் பொறுப்புக்களைப் பகிரல் என்ற கருத்தை" பிரபல்யப்படுத்தவேண்டிய அவசியமுள்ளது.இந்த அணுகுமுறை மாற்றங்களை நடைமுறைப்படுத்த யதார்த்த நடைமுறைகள் எடுக்கப்படவேண்டும். குறிப்பாக குழந்தைப் பராமரிப்பும் வேலைப்பொறுப்பும் உடைய பெற்றோருக்கு உதவக்கூடிய நெகிழ்வுத்தன்மை கொண்ட வேலைநேரங்கள் பற்றிக் குறிப்பிட்ட பதிலளித்தவர்கள், வீட்டிலிருந்தே பணியாற்றக்கூடிய மற்றும் வேலைத்தளங்களில் நம்பகமான குழந்தைப் பராமரிப்பு வசதிகளை ஏற்படுத்தக்கூடிய தொழிற் கொள்கைகளை வலியுறுத்தினர்.